சென்னை: ‘மக்களை தேடி மருத்துவம்’  நீரழிவு, ரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று மருந்துகள் வழங்கப்படும், அதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சரும்,  சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,    “நாளை மறுநாள் ஒன்றிய  மருத்துவ துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால்,  ஹர்ஷவர்தன் ராஜினாமா செய்ததால் புதிய அமைச்சர் பதவியேற்றவுடன் நேரம் கேட்டு டெல்லி செல்ல திட்டமிட்டு உள்ளேன்.

முன்னதாக,  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திட்டமிட்டப்படி  நாளை டெல்லி சென்று ஒன்றிய மருத்துவ துறை செலாளரை சந்தித்து கூடுதல் தடுப்பூசி , எம்ய்ஸ் , புதிய மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்ட தமிழ்நாடு தேவைகள் குறித்து வலியுறுத்துவார்.

கொரோனா  ஊரடங்கு காலக்கட்டத்தில்,  நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உடல் நலனைகருத்தில் கொண்டு, சுமார் 20 லட்சம் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களது வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்குவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி விரைவில் முதல்வரால் தொங்கி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.