விஜயவாடா
ஆந்திர மாநிலத்தில் வரும் ஜூலை 8 முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவலால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. திரிபுரா மாநிலத்தில் மட்டும் இரண்டாம் அலை நேரத்திலும் திரையரங்குகள் மூடப்படவில்லை. கடந்த வாரம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே முறையான தளர்வுகள் அறிவித்த போதும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆந்திர மாநில அரசு வரும் ஜூலை 8 ஆம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் அளிக்க அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே தெலுங்கானாவில் திரையரங்குகளுக்கு அனுமதி அளித்த போதிலும் ஆந்திர அரசு அனுமதி வழங்காததால் புதிய படங்கள் வெளியாகவில்லை. எனவே தெலுங்கானாவிலும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
தற்போது ஆந்திர மாநிலத்தில் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தெலுங்கானாவிலும் திரையரங்குகள் திறக்கவும் புதிய படங்கள் வெளியாகவும் வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் தெலுங்கு திரையுலகில் வெளியீட்டுக்குக் காத்திருக்கும் படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி திரையுலகம் சகஜநிலையை அடையும் எனக் கூறப்படுகிறது.