மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை நேரடியாக பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் தயாராகும் எந்தத் திரைப்படமும் மத்திய திரைப்பட தணிக்கைக்குழுவின் சான்று பெற்றே வெளியாக முடியும். படத்தில் இடம்பெற்றிருக்கும் பாலியல், வன்முறைக் காட்சிகளைப் பொறுத்து படங்களுக்கு யு, யு/ஏ, ஏ சான்றுகள் அளிக்கப்படும். யு படத்தை அனைவரும் பார்க்கலாம். யு/ஏ படத்தை 18 வயதுக்குட்பட்டவர்கள் பெரியவர்களின் துணையுடன் பார்க்கலாம். ஏ சான்றிதழ் பெற்ற படத்தை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவர். இந்தியாவில் யு மற்றும் யு/ஏ இரண்டும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ன் படி ஏற்கனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அதன்படி ஒரு படம் தணிக்கைக்குழுவில் சான்றிதழ் பெற்றாலும், அரசால் அந்த சான்றிதழை மாற்றியமைக்க முடியும்.
அதாவது சான்றிதழை ரத்து செய்து படம் வெளியாகாமல் முடக்க முடியும். இந்த சட்ட வரைவின் மூலம் தணிக்கைக்குழு, நீதிமன்றம் இரண்டையும் தாண்டிய அதிகாரத்தை ஒன்றிய அரசு பெறுகிறது.
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப மனிதர்களின் சுதந்திரவெளி விரிவடையும். இந்தியாவில் அது நேர்மாறாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயத்தை இதுபோன்ற சட்டங்கள் ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரருமான சரத்குமாரும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“படைப்பாளியின் கற்பனைக்கு அரசாங்கம் தனது அதிகாரத்தால் அணைகட்ட எண்ணுவது மடமை. சமூக மாற்றத்துக்கான விதையை தங்களது படைப்புகளில் வெளிக்கொணரும் கலைஞன் மீது சுய விருப்பு, வெறுப்புகளை திணிப்பது கண்டிக்கத்தக்கது.
ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021 ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மத்திய அரசு தடை செய்வதற்கோ, மறுபரிசீலனை செய்ய சென்சார் போர்டிற்கு உத்தரவிடுவதற்கோ வழிவகுத்து திரைப்பட கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அமைந்துள்ளது.
இச்சட்ட வரைவு நீதிமன்ற உத்தரவிற்கும் முரணானது என்பதால் மத்திய அரசு உடனடியாக ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது – அவசியமற்றது @ThanthiTV @PTTVOnlineNews @news7tamil @PMOIndia pic.twitter.com/hSsl0LiJEg
— R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) July 2, 2021