நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் பெண்கள் இயற்கையாக நீண்டு வளர்ந்த தங்கள் கூந்தலை மறைக்கக்கூடிய வகையில் புதிய வடிவமைப்பில் தொப்பிகளை அறிமுகப்படுத்தியிருந்தது சோல் கேப் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பிரிட்டனைச் சேர்ந்த அலிஸ் டியரிங் என்ற நீச்சல் வீராங்கனை இருந்து வருகிறார்.
பிரிட்டன் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் முதல் கறுப்பின பெண் நீச்சல் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சோல் கேப் நிறுவனம் வடிவமைத்த நீச்சல் தொப்பியுடன் எடுத்துக்கொண்ட படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதுடன், இது தனது இயற்கையான கூந்தலுக்கு ஏற்றதாக இருக்கிறது என்று பதிவிட்டார்.
மேலும், நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் உள்ள க்ளோரினால் பெண்களின் கருகருவென வளர்ந்த முடி பாழாகிறது, இந்த புதிய வடிவமைப்பில் உள்ள தொப்பிகள் மூலம் கேசம் உதிர்வது தவிர்க்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச நீச்சல் விளையாட்டு சம்மேளனம் (பினா…..) இந்த புதிய வடிவமைப்பில் உள்ள தொப்பியை ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்த தடை விதித்திருக்கிறது.
புதிய வடிவமைப்பு தலையை மூடுவதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் கூந்தலை மறைப்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறி இதனை ஏற்க மறுத்துள்ளது.
கறுப்பின நீச்சல் சம்மேளனம் என்ற பெயரில் நீச்சல் பயிற்சி மையம் நடத்திவரும் அலிஸ் டியரிங் இது எங்களைப் போன்று இயற்கையான முடி அமைப்பு உள்ளவர்களுக்கு வருத்தம் அளிப்பதோடு, சர்வதேச அரங்கில் இப்போது தான் எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும் நிலையில், இந்த தடையால் நீச்சல் பழக வருபவர்களின் ஆர்வம் குறைந்துவிடும் என்று வேதனைப்பட்டார்.