சென்னை: கொரோனா இறப்புகள் மறைக்கப்படவில்லை, இறப்புகளை மறைப்பதாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு என, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
தமிழ்கத்தில் கோவிட் இறப்புகளை அரசு குறைத்துக் காட்டுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இறப்புச் சான்றிதழ்களை மறைக்கிறோம் எனத் தொடர்ந்து செய்திகளில் சொல்லப்படுகின்றன. இது தவறான குற்றச்சாட்டு. மருத்துவர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.
இறப்புச் சான்றிதழ் படிவம் 6-ல் இறப்புக் காரணமே இருக்காது. கோவிட் நேரடி மரணம், கோவிட் இணைநோய் மரணங்கள் ஆகியவை ஐ.சி.எம்.ஆர். விதிகளின்படி பதிவு செய்யப்படுகிறது. கோவிட் இணை நோயால் தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் இறந்தால், பொதுமக்கள் மீண்டும் இறப்புச் சான்றிதழைத் திருத்தலாம்.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளிலிருந்து வரும் தரவுகளை வைத்து இறப்புகளைப் பதிவு செய்கிறார். கோவிட், இணை நோய்களால் இறந்தால் பதிவு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.