சென்னை: அரசின் கைகளில் 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கையிருப்பு உள்ளதால்,  தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா 2வது அலையின் கடுமையான தாக்கத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் மேலோங்கி உள்ளது. இதனால் தடுப்பூசி முகாம்களின் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், போதுமான அளவில் தடுப்பூசி கிடைக்காததால், சில இடங்களில் மக்கள் போராட்டங்களும் நடைபெற்றன. பல முகாம்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. பல இடங்களில் சுகாதார துறை ஊழியர்களிடம் வாக்குவாதங்க்ளும்ஏற்பட்டன.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் நேற்று  50 பார்சல்களில் 6 லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்று கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்று மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பினர். மற்றொரு விமானத்திலும்  4 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 10 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் இன்று தடுப்பூசி முகாம் வழக்கம் போல் இயங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.