டில்லி

டிரோன் விமானங்கள் எளிதில் வாங்க முடிவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ராணுவ தளபதி நரவானே எச்சரித்துள்ளார்.

ஜம்மு விமானநிலையத்தில் சமீபத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது முதல் அங்கு கடும் பரபரப்பு நிலவுகிறது.   இந்த தாக்குதல் இரு டிரோன் விமானம் (ஆளில்லாமல் இயங்கும் சிறு விமானம்) மூலம் நடந்துள்ளது.  இதையொட்டி ரஜோரி மாவட்டத்தில் டிரோன் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே “தற்போது டிரோன் விமானங்கள் எளிதில் வாங்க முடியும் என்னும் நிலை உள்ளது.   இதனால் தீவிரவாதிகள் அதிக அளவில் டிரோன் விமானங்களை வாங்கி தாக்குதல் நடத்த முடிகிறது.  இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கிறது.

நாம் இதனால் எதிர்காலத்தில் போர் உத்திகளில் டிரோன் விமானத் தாக்குதலையும் கருத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  ஜம்மு வெடிகுண்டு சம்பவம் நமது ராணுவத்தில் டிரோன் விமானங்களைத் தாக்கி அழிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை இணைக்கும் நிலைமையை ஏற்படுத்தி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.