பெர்ன்
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டுக்கு அனுமதி அளித்து இந்தியப் பயணிகள் பயணம் செய்யப் பச்சைக் கொடி காட்டி உள்ளன.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா இணைந்து கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. இதற்கு இந்தியாவில் கோவிஷீல்ட் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் கோவிஷீல்ட் மருந்துக்கு அதே பெயரில் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்த அனுமதி கோரவில்லை. ஆகவே ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கிரீன் பாஸ் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய புதிய கொரோனா வழி காட்டுதலின்படி கிரீன்பாஸ் உள்ளவர்கள் மட்டுமே ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய முடியும். எனவே கோவிஷீல்ட் மருந்து போட்டுக்கொண்ட இந்தியர்களுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையொட்டி சீரம் இன்ஸ்டிடியூட் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தையின் போது இதே மருந்துக்கு வேறு பெயரில் இந்த நாடுகள் அனுமதி அளித்துள்ளது சுட்டிக் காட்டப்பட்டது.
தற்போது ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் கோவிஷீல்ட் மருந்துக்கு கிரீன் பாஸ் வழங்க ஒப்புக கொண்டுள்ளன. தவிர எஸ்டோனியா நாடு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசி மருந்தைப் போட்டுக் கொண்டவர்களுக்கும் கிரீன் பாஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.