திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வயக்காட்டில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து வெளியேறி வரும் கச்சா எண்ணெயால் பயிர்கள் மற்றும் விலை நிலங்கள் சேதமடைந்துள்ளது. இதனால்வ விவசாயிகள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், கோட்டூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு அடியில் செல்லும் குழாயில், இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது.
இதனால் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்ட குறுவை சாகுபடி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. முளைத்திருந்த நெற்பயிர்கள், முற்றிலும் நாசமாகியுள்ளன.
இதனிடையே, கச்சா எண்ணெய் வெளியேற்றத்தை தடுப்பதற்கான பணிகள், இதுவரை மேற்கொள்ளப்படாததால், விளைநிலத்தில் பீய்ச்சி அடித்தபடி தொடர்ந்து வெளியேறி வரும் கச்சா எண்ணெய், அருகாமையில் உள்ள விளை நிலங்களுக்கும் பரவக்கூடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகள், பாதிக்கப்பட்ட விளை நிலத்திற்கு ஒஎன்ஜிசி நிறுவனம் உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.