சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதுபோல மேலும் பல மாவட்டங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில்வ 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில், மக்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் கடந்த 4 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.
முன்னதாக , தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க சென்னை மாநகராட்சி, சென்ற வாரம் தடுப்பூசி செலுத்துவதற்குப் பதிவு செய்வதற்காக பிரத்யேகமாக ஒரு இணைய தளத்தை உருவாக்கியது.இந்த இணையதளத்தில் பதிவு செய்தால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம், நாள் அதில் தெரிவிக்கப்படும். அந்த நாட்களில் அவர்கள் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில், 25,05,796 நபர்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இன்று (ஜூன் 28) சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தடுப்பூசிக்காக மாநகராட்சிஇந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் மேலும் தடுப்பூசிகள் இன்று அல்லது நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை வந்தபிறகே, மீண்டும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுமா என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் கும்பகோணம் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் பணிகள் தடை பட்டு உள்ளது.