மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் அங்கு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இதையொட்டி மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தார்.
தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் ஜூலை முதல் மும்பை உள்ளிட்ட பல பெரு நகரங்களில் மேலும் தளர்வுகளை அறிவிக்க அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது தளர்வுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, “தற்போது இரண்டாம் அலை கொரோனா முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் மேலும் தளர்வுகளை அறிவித்தால் மூன்றாம் அலைக்கு அது காரணமாகி விடும். தற்போது மாநிலத்தில் மருத்துவமனை படுக்கைகள், தடுப்பூசி, மற்றும் ஆக்சிஜன் இருப்பை பொறுத்து ஊரடக்கில் தளர்வுகளை அறிவிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.