சென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது மற்றும் மாநிலம் முழுவதும் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழகஅரசு அறிவித்த ஊரடங்கின்படி மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது தொற்று பாதிப்பு மேலும் குறைந்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பொதுப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை மற்ற மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாகவும், மேலும் சில தளர்வுகள் கொடுப்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்படவுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும், மாநிலம் முழுவதும் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது, தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.