“மிஸ்பண்ணீடாதீங்க..அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று வசனம் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மக்கள் தொலைக்காட்சியில் “சொல்லுங்கண்ணே சொல்லுங்க” என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி புகழ் பெற்றார் இமான் அண்ணாச்சி. இதையடுத்து அதே பெயரில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். மேலும், குட்டீஸ் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியையும் தொகுத்தளித்தார்.
தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் இவரைத்தேடி வந்தன. மரியான், பூஜை, காக்கி சட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது, முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் துரை முருகன், ஆ. ராசா, நடிகர் பூச்சி முருகன், திரைப்பட தயாரிப்பாளர் ஏல்.எல்.அழகப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த இமான் அண்ணாச்சி, “திமுகழகம் மீது எப்போதுமே எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. அதன் அடிப்படையில் தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் முறைப்படி என்னை இணைத்துக்கொண்டேன்.
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மிஸ் பண்ணீடாதீங்க….அப்புறம் வருத்தப்படுவீங்க என்று எனது பாணியில் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்யப்போகிறேன். மீண்டும் தமிழக முதலமைச்சராக கருணாநிதி பதவி ஏற்பது உறுதி என்றார்.