வுகாத்தி

ரசு வேலை மற்றும் உதவிகளுக்கு இரு குழந்தைகள் இருந்தால் மட்டுமே  தகுதி என மீண்டும் அசாம் பாஜக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அசாம் மாநில பாஜக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.  அதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளோருக்கு அரசுப் பணிகள் உள்ளிட்ட எவ்வித அரசு உதவிகளும் அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.  இதற்கு மாநிலம் எங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.  இந்நிலையில் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடந்தது.

அதையொட்டி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சட்டத்தை அசாம் அரசு திரும்பப் பெற்றது.   இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.   இந்நிலையில் அரசு அளிக்கும் பல திட்டங்களில் உதவி பெற இரு குழந்தைகள் வரை உள்ளோருக்குமட்டுமே தகுதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “தற்போது இரு குழந்தைகள் உள்ளோருக்கு மட்டுமே ஒரு சில அரசுப் பணிகள் மற்றும் உதவிகளுக்குத் தகுதி உள்ளதாக அறிவித்துள்ளோம்.  சிறிது சிறிதாக இந்த விதியை அரசின் அனைத்து திட்டங்களுக்கும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம். 

இதில் பள்ளிகள், கல்லூரிகள் சேர்க்கை, பிரதமர் வீட்டு வசதி திட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்க எண்ணி உள்ளோம்.  ஆனால் வேறு பல திட்டங்களுக்கு இந்த இரு குழந்தைகள் விதியை அமலுக்குக் கொண்டு வருவதன் மூலம் மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.  

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.  குறிப்பாக முதல்வருக்கு 5 சகோதரர்கள் இருக்கும் போது அவர் மக்கள் தொகை அதிகரிப்பை குறித்து பேசுவதை கடுமையாக விமர்சித்துள்ளன.