காஞ்சிபுரம்

காஞ்சியில் 3 நாட்கள் முன்பு காணாமல் போன இளைஞர் கீழ்கதிர்பூர் கிராம டாஸ்மாக் கடை அருகே உள்ள கிணற்றில் பிணமாகக் கிடைத்துள்ளார்.

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மணிகண்டன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார்.  இதையொட்டி அவர் குடும்பத்தினர் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  அந்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை காவல்துறையினர் தேடி வந்தனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் அளித்தனர்.  இந்த புகாரையொட்டி பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய காவலர்கள் அந்த கிணற்றில் சோதனை இட்டதில் இளைஞர் ஒருவரின் உடல் கிடந்துள்ளது.  தீயணைப்பு வீரர் உதவியுடன் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போன மணிகண்டன் சடலமாகக் கிடைத்தது தெரிய வந்துள்ளது.  அந்த உடலைக் காஞ்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   மரணம் அடைந்த மணிகண்டன் தவறி விழுந்து மரணம் அடைந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா எனப் பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.