நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ வல்லுநனர்களும்,சுகாதார அமைப்பினரும். அதிலும் குறிப்பாக, 3வது அலையில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என ஒரு தரப்பினரும், குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்காது என மற்றொரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்து, மக்களை குழப்பி வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் எனப்படும் உயிர்கொல்லி நோய் பரவியது.  இது  கண்டறியப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும்,  உருமாறிய வடிவில் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. இது வெளியான விதம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த வைரஸ் முதலில் எங்கே, எப்படி தோன்றியது? இது ஒரு பயோ வாரா என பல்வேறு யூகங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன. இது சீனாவின் சதி வேலை   என்றும் இதில் ஆதாரம் ஏதும் இல்லை என்றும் கூறி வருகின்றனர். சமீப காலமாக கொரோனா வைரஸ்  சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்துள்ளது என்ற இந்த சர்ச்சைக்குரிய கூற்று இப்போது மீண்டும் வலு பெற்றுள்ளது.

இதற்கிடையில் உலகம் முழுவதும்  கொரோனா 2வது அலை பரவி வருவதாகவும், சில நாடுகளில் கொரோனா 3வது அலை பரவி உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனாவின் 2வது அலை பரவியதாகவும், இதன் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் கடுமையாக இருந்ததாகவும், தற்போது  அலையின் வீரியம் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கொரோனா 3வது அலை  செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக குழந்தைகள் அதிகம் தாக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதுடன், அதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், மாநில அரசுகள் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதை ஊடகங்களும் பெரிதாக்கி, விவாத மேடைளை உருவாக்கி, மக்களை மேலும் மேலும் குழப்பி வருகின்றன.

ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்கள் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி யிருக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 3-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆக, நாடு முழுவதும் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.

கொரோனா 3வது அலை குறித்து, டெல்லியில் உள்ள எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் டாக்டர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வு  முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுக்கு 2 முதல் 17 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றதாக கூறியுள்ளது. ஆய்வு முடிவில், குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது.

இவ்வாறு குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாதிக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொதுமக்கள்  மூன்றாவது அலை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று  அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அதுபோல, கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்காது என்றும் உலக சுகாதார அமைப்பும் தெரிவித்து உள்ளது.

ஆனால், கொரோனா மூன்றாவது கொரோனா அலையில் குழந்தைகள் அதிகம் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கு தங்களது நாடே ஆதாரம் என தெரிவித்து உள்ளது.  அமெரிக்காவில் கொரோனா 3வது அலையின் தாக்கம் தொடர்கறிது. இதில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 3 விழுக்காட்டினர் குழந்தைகளாக இருந்த சூழலில், தற்போது மூன்றாவது அலையில், 22 விழுக்காடாக குழந்தைகள் பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது. இதற்குகாரணமாக, குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொற்றில் இருந்து குழந்தைகளையும் பாதுகாக்க, விரைவில் குழந்தைகளும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்றும்,  பெரியவர்களை விட குழந்தைகள் வழி அதிகளவில் தொற்று பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் கொரோனாவிலிருந்து பாதிக்கப்படுவதை தவிர்க்க, உலகிலேயே முதல் முதலாக கனடாவில் 12முதல் 15வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்துபடியாக அமெரிக்காவும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. குழந்தைகளுக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி வரை போடலாம் என்ற ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன

இந்தியாவை பொருத்தவரை தற்போது வரை 18வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்னும் குழந்தைகளுக்கு போடப்படவில்லை. அதனால் இந்தியாவில் கொரோனா 3வது அலைக்கு குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவின் முதல் அலை முதியவர்களையும் இரண்டாம் அலை இளைஞர்களையும் பாதித்ததுபோல மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் உலக சுகாதார நிறுவனமோ, குழந்தைகளை அதிக அளவு பாதிக்காது என்று தெரிவித்து வருகிறது.

கொரோனா 3வதுஅலையில் ஏன் இந்த குழப்பம், இந்த குழப்பங்களை மருத்துவ நிபுணர்களும், உலக சுகாதார அமைப்பும் உட்கார்ந்து பேசி, ஆய்வுகளை அலசி, அதில் இறுதி முடிவு எடுத்து மக்களிடையே தெரிவிப்பதை விட்டு, விவாத மேடைகளில் ஆளுக்கு ஒரு கருத்துக்களை தெரிவித்து மக்களை குழப்பியும் பயத்தையும் ஏற்படுத்தி வருவது ஏன்?  ஊடகங்களும் இதுபோன்ற மக்கள் நலப்பிரச்சினையில், ஆக்கப்பூர்வமான தகவல்களை வெளியிட முன்வரவேண்டும். விவாத மேடைகளை தவிர்க்கலாமே….!

 கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை உயிர்பயத்தினாலேயே நிகழ்கிறது. இதனால் மக்களிடையே மேலும் பயத்தை ஏற்படுத்துவதை விட்டு, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டலாமே. ஒருவேளை கொரோனா 3வது அலை பரவினால், அதன் தாக்கத்தில் இருந்து  குழந்தைகளை காப்பாற்ற எடுக்க வேண்டிய நடிவடிக்கைகளை அறிவுறுத்தலாமே.

ஏன், தற்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா தடுப்பு  வழிமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து, அதை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்துவதுடன், அடிக்கடி கைகழுவுதல், நெரிசல் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். 

இதுவே குழந்தைகள் மட்டுமின்றி நாம் ஒவ்வொருவரும், தொற்றின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான ஒரே வழி.