டெல்லி: 2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதைத் தொடர்ந்து முதன்முறையாக இன்று டெல்லிக்கு சென்று பிரதமர்  மோடியை சந்தித்து பேசினார். ,பிரதமர் நரேந்திர மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பானது பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பானது 25நிமிடங்கள் நடைபெற்றது. அப்போது,  தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின்போது,  தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்றும் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணைக் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும்,  தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும். கருப்பு பூஞ்சை மருந்து, ஜிஎஸ்டி நிலுவை தொகையை பற்றி வலியுறுத்தியதாகவும், 7 பேர் விடுதலை, மதுரை எய்ம்ஸ் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.