யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டம் நேற்றிரவு இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது, இந்த போட்டியில் இத்தாலி அணிக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து அணி மோதியது.
போட்டி துவங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன் போட்டி நடக்க இருந்த ஒலிம்பிக்கா ஸ்டேடியத்திற்கு ஒரு கிலோ மீட்டர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மேம்படுத்தப்பட்ட வெடி சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு பொருளில் இருந்து வயர்கள் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, போலீசார் அந்த சாலையை மூடி சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ‘ஸ்பிரே டின்’ போன்ற அமைப்பில் வைக்கப்பட்டிருந்த கையால் தயாரிக்கப்பட்ட குறைந்த சக்தி வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

விசாரணையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட கார் உள்ளூர் அரசியல்வாதியான மார்கோ டோரியா என்பவருடையது என்று தெரியவந்தது, ஜெனோவா நகரின் முன்னாள் மேயரான இவர் ரோம் நகரில் உள்ள பூங்காக்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களை புனரமைக்கும் குழுவின் தலைவராக உள்ளார்.
புராதன கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக இவர் செயல்பட்டு வருவதால் இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, அதன் காரணமாக இவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து போட்டி துவங்கும் சில மணிநேரத்துக்கு முன் மைதானத்துக்கு அருகே வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் ரோம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.