கும்பகோணம்
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடுதலாக 2000 மருத்துவர்களும் 6000 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதையொட்டி மாநிலம் எங்கும் தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்ட அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அமைச்சர் மா சுப்ரமணியன், “கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்தில் தடையின்றி கிடைக்க முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுவரை தமிழகத்துக்கு ஒரு கோடியே 15 லட்சத்து 57 ஆயிரத்து 690 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றில் ஒரு கோடியே 6 லட்சத்து 60 ஆயிரத்து 464 நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
இன்னும் கூடுதலாக சுமார் 10.25 கோடி தடுப்பூசிகள் கிடைத்தால் தமிழகத்தில் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும். தமிழக மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கத் தமிழகத்தில் கூடுதலாக 2000 மருத்துவர்கள் மற்றும் 6000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]