சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எண்ணெய் -எரிவாயு, ஹைட்ரோகார்பன் எடுக்க `Discovered Small Fields’ எனப்படும், (கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள்) (DSF) ஏலத்திட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டு முதல் ஏலமும், 2018-ம் ஆண்டு இரண்டாம் ஏலமும் நடைபெற்றன. தற்போது மூன்றாம் கட்ட ஏலம் பற்றிய அறிவிப்பு கடந்த 10-ம் தேதி வெளியானது. 32 ஒப்பந்தப் பகுதிகள் மூலம் 75 எண்ணெய் வயல்களை பெட்ரோலியத்துறை ஏலம்விடுகிறது. , காவிரிப்படுகை புதுக்கோட்டை மாவட்டம், வட தெரு கிராமப் பகுதியில் 463.2 சதுர கிலோமீட்டர் பகுதி ஏலம் விடப்படுகிறது. ஜூன் 30-ம் தேதி ஏலம் பற்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையே இணையவழிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்க தமிழக முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், இது குறித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டுமெனவும், பெட்ரோலியத்துறை மற்றும் அமைச்சகம் ஏலம்விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதியை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கவும், கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் 5 கிணறுகள் அமைக்கவும் ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. தற்போதைய விதிகளின்படி, இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.