சென்னை: கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களில் 21,285 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்துக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 69 இடங்களில் சித்தா கொரோனா சிகிச்சை மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவைகளில் 54 சித்தா கொரோனா சிகிச்சை மையங்கள், 11 யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள், 2 ஆயுர்வேத சிகிச்சை மையங்கள், ஒரு யுனானி சிகிச்சை மையம், ஒரு ஓமியோபதி சிகிச்சை மையம் என மொத்தம் 69 இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சிகிச்சைக்காக 6,541 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிகிச்சை பெற்று கடந்த ஒரு மாதத்தில் 21,285 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில், சித்த மருத்துவத்தை ஊக்கப்படுத்த விரைவில், ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையம் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோயின் தன்மை அறிந்து கொள்வதற்கு பயன்படும். இந்த மையத்தை தொடர்பு கொள்ள 73587 23063 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.