சேலம்: 2 நாள் பயணமாக திருச்சி சேலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் செல்கிறார். அதையடுத்து மேட்டூர் செல்லும் முதல்வர் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து திருச்சி சென்றார். அஅங்கு  கல்லணை பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் சென்றதுடன் அந்த பகுதிகளிலும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டதுடன்  டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, இன்று  சேலம் மாவட்டம் செல்கிறார். அங்கு ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர், மேட்டூர் அணையைப் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலாசனை நடத்துகிறார்.

பொதுவாக டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்க்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி   நீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அதுபோல இந்தாண்டும் தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே, இன்று 10:45 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க 5, 8,16 என 29 கதவுகள் உள்ளன. இதில் பருவ மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும். இதனிடையே, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.