சென்னை: கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்து மக்களுக்கு தெரிவிக்கக்கூடாது என்ற மத்தியஅரசின் அறிவிப்பு தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தஉள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியானதாக இருக்கும் என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால், மத்தியஅரசு தடுப்பூசி கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல மாநில அரசுகள் மத்தியஅரசிடம் தடுப்பூசி அனுப்பக்கோரி நெருக்குதல்களை ஏற்படுத்தி வருகின்றன. பல இடங்களில் மக்களும் தடுப்பூசி போட்டுகொள்ள வருகை தந்து, தடுப்பூசி கிடைக்காததால் மத்திய மாநில அரசுகளை வசைபாடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில அரசுகள் வேறு எந்த நிறுவனத்துடனும்,பொதுவெளியிலும் வெளியிட மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை  எழுதியுள்ள கடிதத்தில்,  கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்,பொதுத்தளங்களிலோ,வேறு எந்த நிறுவனத்துடனோ பகிரக்கூடாது. இது “சென்சிட்டிவ்” டேட்டா ஆகும். எனவே,அதை மத்திய அரசிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும், ஐக்கிய மேம்பாட்டு திட்டத்தின் உதவியுடன் இந்தியாவில் தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை “இ-வின்” என்ற தளத்தில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது. இந்த தளத்தில்  தளத்தில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் நாள்தோறும் பதிவேற்றம் செய்கின்றன. இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும்.

எனவே,”இ-வின்” மின்னணு அமைப்பில் உள்ள தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த நிறுவனத்துடனும் ஊடகங்களுடனும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளக் கூடாது, ஆன்லைனில் வெளியிடக் கூடாது”, என்று  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தடுப்பூசி எண்ணிக்கையை பொதுத்தளத்தில் தெரிவிக்க கூடாது என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆனால், தடுப்பூசி கையிருப்பு குறித்து தெரிவிக்காமல் இருந்தால் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியாமல்,தடுப்பூசிக்காக மக்கள் வரிசையில் காத்திருந்து ஏமாறும் நிலை ஏற்படும். எனவே,தடுப்பூசி குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்வது தான் சிறந்தது.

இருப்பினும், தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை” என்று கூறியவர், தமிழகத்திற்கு இதுவரை 1,01,63,000 தடுப்பூசி டோஸ்கள் வந்துள்ளன.அவற்றில்  97,62,957 டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.