புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ தூய்மை பணியாளர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிற்றூர்களில் இதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கொரோனா தடுப்பூசி போடப் பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே ஒரு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
அங்கு சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போடச் சென்ற சிலருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்தும் அங்கிருந்த மருத்துவ தூய்மை பணியாளர் ஊசி போட்டுள்ளார். இதில் ஒருவரான மோகன் என்பவருக்குக் கையில் வலி குறையாமல் இருந்ததால் அவர் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த செய்தி பல பத்திரிகைகளில் வெளியானது இது குறித்து மருத்து பணிகள் இயக்ககம் விசாரணை நடத்தி உள்ளது.
இது குறித்து தமிழக அரசு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்,
“புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாதபுரம் ஆரம்பச் சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவமனை தூய்மை பணியாளர் சில நாட்களுக்கு முன் வந்த செய்திகளைத் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் தடுப்பூசி பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் தன்னுடைய பணியைச் செய்யாமல் இருந்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்காணிக்க வேண்டிய ஆரம்பச் சுகாதார மருத்துவ அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.