கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உலங்கெங்கும் இதுவரை 17.44 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 37.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் பரவல் முதன் முதலில் கண்டறியப்பட்ட 140 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் இதுவரை 91,300 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு 4636 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 98 வது இடத்தில் சீனா உள்ளது.
உலகெங்கும் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியது என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கும் நிலையில், சீனா இதுகுறித்து மவுனம் காத்துவருகிறது.
இது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள இந்தியாவின் பிரபல வைராலஜிஸ்ட்டும், வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் பேராசியிரியருமான டாக்டர் டி. ஜேக்கப் ஜான், இது ஆய்வகத்தில் இருந்து வெளியேறிய வைரஸ் தான் என்று உறுதிபட கூறுகிறார்.
சீனாவில் இருந்து பரவ தொடங்கி இருக்கும் இந்த வைரஸ் மிகவும் வித்தியாசமாக உள்ளதோடு பல மர்மங்களும் அடங்கியுள்ளது. சீனா இதற்காக தன்னை ஏற்கனவே தயார் செய்து கொண்டிருக்கிறது. அதோடு பல்வேறு விவரங்களை மறைத்து வருகிறது.
டிசம்பர் 2019 ல் இந்த வைரஸ் பரவ தொடங்கியதாக கண்டறியப்பட்ட போதும் இரண்டே மாதத்தில் பிப்ரவரி 2020 ல் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக சீனாவின் இளம் விஞ்ஞானி ஒருவர் அறிவித்தார்.
தொடர்புடைய செய்தி : பொருளாதார தடையில் இருந்து தப்பிக்க புதிய சட்டம் இயற்றுகிறது சீனா
இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய நிலையில், அந்த இளம் விஞ்ஞானி திடீரென இறந்துபோய்விட்டார். இவை அனைத்தையும் பார்க்கும் போது குற்றவாளிகள் குற்றத்தை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியை போல் சீனா நடந்துகொள்வதாக எண்ணத் தோன்றுகிறது என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
மேலும், இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் தான் என்பதற்கான உறுதியான ஆதாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.