டில்லி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 60-70% பேருக்கு  இணை நோய்கள் இருந்ததாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்திப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இந்தியாவில் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.    ஆயினும் தடுப்பூசியை விரைவாகப் போடாவிட்டால் மூன்றாம் அலை பாதிப்பில் நாடு மேலும் கடுமையாகப் பாதிப்படையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக மூன்றாம் அலை பரவலின் போது குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படலாம் என்னும் கருத்து உள்ளது.  இது குறித்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில், “இரண்டாம் அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு லேசான உடல்நலக் குறைவு மட்டுமே ஏற்பட்டது.  பாதிப்பு அதிகரித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 60-70% பேருக்கு இணை நோய்கள் இருந்தன.

அதே வேளையில் கொரோனா மூன்றாம் அலையின் போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எவ்வித மருத்துவச் சான்றும் இல்லை.   எனவே எதிர்கால கொரோனா அலைகளில் குழந்தைகளுக்குக் கடுமையான தொற்று ஏற்படும் என நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.