மாட்ரிட்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயின் நாட்டுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் பல ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பு அடைந்தன. அவற்றில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகள் காரணமாகப் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளன.  இதனால் ஸ்பெயின் உள்ளிட்ட பல உலக நாடுகள் தங்கள் எல்லைகளைச் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துள்ளன.

தற்போது உலகெங்கும் அதிக அளவில் மாடர்னா, பிஃபைஸர், ஸ்புட்னிக் கோவிஷீல்ட்  எனப் பல நிறுவன தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.  இதுவரை உலக மக்களில் 10%க்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.   இந்நிலையில் ஸ்பெயின் நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் கரோலினா, “ஸ்பெயின் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள்.   ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பு இல்லை என்னும் நெகடிவ் சான்றிதழ் அவசியம் பெற்றிருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.