சென்னை
பிரதமர் மோடி மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்ததை முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
கடந்த சில நாட்களாக நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே மூன்றாம் அலை தாக்குதல் நடைபெறும் முன்பு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று மாலை தொலைக்காட்சி வழியாகப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “ஏற்கனவே இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் முழு அளவில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் மூன்று தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையின் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் அதிகரிக்கப்பட உள்ளன.
வரும் 21 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்காக வகுக்கப்பட்ட புதிய கொள்கை அமலுக்கு வருகிறது. ஏற்கனவே இது குறித்து மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. இருப்பினும் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி கொள்முதலில் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த புதிய கொள்கை வகுக்கப்பட்டது.
இதன்படி மத்திய அரசே கொரோனா தடுப்பூசியைக் கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க உள்ளது. இனி மாநில அரசுகள் தடுப்பூசிக்காகச் செலவு செய்ய வேண்டாம். மாநிலங்களுக்கு வழங்கிய 75% போக எஞ்சிய 25% தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவமனைகளுக்கு நேரடியாக விற்பனை செய்யும்” என அறிவித்திருந்தார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டரில்,
“நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்னும் அறிவிப்பை வரவேற்கிறேன், அத்துடன் மத்திய அரசின் முந்தைய நிலைய மாற்றிக் கொண்டதற்குப் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்”
எனப் பதிந்துள்ளார்.