சென்னை: தமிழகத்தில் உள்ள பழமையான, இடிந்து விழும் நிலையில் உள்ள கோவில்களின் ஸ்திரத்தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர், கோவில்  சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் விபத்து நடைபெற்ற கோவிலுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர்.  அந்த கோவில் பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தை அழைத்த அமைச்சர், கோவிலின் கட்டிட பராமரிப்பு பணிகளை உடனடியாக  தொடங்கி பராமரிக்க உத்தரவிட்டார்.

பின்னர்,  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களின் ஸ்திரத்தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் முடிவுகளின் அடிப்படையில் கோவில்களின் கட்டுமான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். மேலும், கோயில் இடிந்து விழுந்ததில் இறந்த பக்தருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

இதனையடுத்து சென்னை செளகார்பேட்டை பகுதி மின்ட் தெருவில் தனியார் அறக்கட்டளைகள் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிராட்வே பகுதியில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.