சென்னை: தமிழகத்தில் +2 தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின்  இறுதி முடிவு எடுப்பார் என்று, அனைத்து கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் முடிந்தபின் அமைச்சர் அன்பில் மகேஷ்தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் பிளஸ்2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை  பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம்  கருத்து கேட்டிருந்தது. இதில் தேர்வுகளை நடத்த 60 சதவிகிதம் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து,  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இன்று  சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் இன்று காணொளி மூலம்  அமைச்சர் அன்பில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாலாஜி உட்பட 13 கட்சிகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

இந்த கூட்டத்தில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மமக, மதிமுக, கொ.ம.தே.க, தமிழக வாழ்வுரிமை கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், தேர்வு நடத்தக்கூடாது, பாஜக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதிமுக எதற்கும் பிடிகொடுக்காமல், பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாடே தங்களின் நிலைப்பாடு என அதிமுக கூறி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சன் அன்பில் மகேஷ்,  மாணவர்களின் நலனைக் கருதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக் கிணங்க இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர். ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து உள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம். அதன் பிறகு இறுதி முடிவு என்ன என்பதை முதல்வர் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.