உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள மாதவ்கஞ் கிராமத்தை சேர்ந்தவர் அலோக் ராம்.

ஜூன் மாதம் 18 ம் தேதி இவரது திருமணம் நடக்க உள்ள நிலையில், இந்த கிராம மக்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அலோக் ராம், தனது திருமணத்தின் போது மாப்பிள்ளை அழைப்புக்கு குதிரையில் அமர்ந்து செல்லப்போவதாக கூறியிருப்பது அந்த பகுதியில் உள்ள உயர் சாதியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

அலோக் ராம்

காலம் காலமாக குதிரையில் ஏறி மாப்பிள்ளை ஊர்வலம் வருவது என்பது உயர்சாதியினருக்கு மட்டுமே எழுதப்படாத உரிமையாக இருந்துவரும் நிலையில், அலோக் ராமின் இந்த பேச்சு அவரது உறவினர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிக்கை வைத்து உறவினர்களை திருமணத்திற்கு அழைத்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியவர்கள், இப்போது அந்த பகுதி காவல் துறையினரிடம் புகார் அளிக்க மனுவுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று காவல்துறையிடம் மனு அளித்துள்ள அலோக் ராமுக்கு அதற்கான உத்தரவாதம் அளித்துள்ள போதும், காவல்துறையினர் வாய்மொழியாக சொன்னால் போதாது அதை எழுதிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு டெல்லியில் உள்ள ஒரு பாலிதீன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்துவந்த அலோக் ராம் தற்போது வேலை இல்லாமல் அவரது சொந்த கிராமத்தில் இருக்கிறார், விவசாய கூலி வேலை செய்யும் இவரது தந்தையின் வருமானத்தில் இவரது குடும்பம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கும் அந்த மாவட்ட பீம் ஆர்மி கட்சியின் தலைவர் ஆகாஷ் ரவான், “உயர்சாதியினர் அலோக் ராமின் திருமணத்தில் இடையூறு ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்பதால் காவல் துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“அம்பேத்கரால் வரையறுக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பின்பற்றும் இந்திய நாட்டில் அனைத்து சமூகத்தினருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது, மாப்பிள்ளை ஊர்வலத்தில் நான் குதிரையில் ஏறாமல் விடமாட்டேன்” என்று மாப்பிள்ளை உறுதியாக இருக்கிறார்.

நன்றி : தி வயர்