டெல்லி: நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், மேலும் ஒரு புதிய நிறுவனத்துக்கு தடுப்பூசி தயாரிக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், போதுமான அளவில் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், ஐதராபாத் அரசு நிறுவனத்தில் கோவாக்சின், புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்வதிலும் மத்தியஅரசு ஈடுபட்டு உள்ளது. அந்தவகையில் ரஷியாவில் தயாரிக்கப்பட்ட 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தனி சரக்கு விமானம் மூலம்கடந்த வாரம் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் 90 நிமிடங்களில் தேவைப்படும் பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பையோலாஜிக்கல் -இ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு, கொரோனா தடுப்பூசி தயாரிக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிறுவனம் அடுத்த சில மாதங்களில் 30 கோடி கரோனா தடுப்பூசிகளைத் தயாரித்து வழங்கும் என்றும், இதற்காக முன்பணமாக, ரூ.1,500 கோடியை  மத்திய அரசு வழங்க உள்ளது.

அடுத்த சில மாதங்களில் பையோலாஜிக்கல் -இ நிறுவனத்தின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது மட்டுமின்றி மேலும் 3  பொதுத்துறை நிறுவனங்களுக்கு, தற்சார்பு இந்தியா 3.0 கோவிட் சுரக்‌ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை உதவி அளித்து வருகிறது. அதன்படி,  மும்பையில் உள்ள ‘ஹப்கைன் பயோபார்மசூட்டிக்கல் கார்பரேஷன் லிமிடெட், ஐதராபாத்தில் உள்ள ‘இந்தியன் இமுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட், உத்தரப் பிரதேசம் புலந்சாகரில் உள்ள ‘பாரத் இமுனோலாஜிக்கல்ஸ் மற்றும் பயோலாஜிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவை கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தயாராகி வருகின்றன.