சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.  தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு 7ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் ஊரங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது,  தடுப்பூசி பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தளர்வுகளுடன் ஊரடங்கை  மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும், அதன்பிறகு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறிதுத அறிவிப்பு வெளியாகும் என  சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி, கொரோனா பரவல் குறைவாக உள்ள சென்னை உள்பட பல மாவட்டங்களில், அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், தொற்று அதிகமாக உள்ள இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.