தேனி: தமிழகத்தில் கொரோனா 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் குவிந்து கிடக்கும் பிணங்களே சாட்சியாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை குறைந்து வருவதாக கூறப்பட்டாலும், தென் மாநிலங்களில் தொற்று பரவல் தீவிரமான நிலையிலேயே உள்ளது. அதுவும் தமிழகத்தில் தொற்று பரவல் கொங்கு மண்டலத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன்,. திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்பட பல கிராமப்புறங்களிலும் கடுமையான பாதிப்பு தென்படுகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தொற்று பரவல் காரணமாக, கிராமப்புறங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களின் சாவு மறைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள சவக்கிடங்குகளில் ஏராளமான பிணங்கள் குவிந்து வருவதாக புகார்கள் எழுந்தன. ஆனால், அதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. ஆனால், தற்போது, தேனி அரசு மருத்துவமனையில், பிணங்கள் குவிந்து கிடக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ கழிவுகள் கொட்டி பாதுகாப்பாக வைக்கப்படும் பிளாஸ்டிக் கவர்களுடன், கோரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களும் பிளாஸ்டிக் கவரால் அரைகுறை யாக சுற்றப்பட்டு, குப்பை கூளங்களுடன் போடப்பட்டுள்ள அலங்கோல காட்சி பார்ப்போர்களின் மனதை வருடுகிறது.
இதுமட்டுமின்றி, உயிரிழந்தவர்களின் உடல்களை கேட்டு வரும் உறவினர்களை மருத்துவமனை ஊழியர்கள் அவமதிப்பது மட்டுமின்றி, அங்கே கிடக்கும் உடல்களில் உங்களது உறவினர் யார் என்பதை பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவதாக வும், இதனால் உறவினர்களின் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அனைத்து உடல்களும் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு உள்ளதால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவாகவும், இதனால் பிணவறையில் உடல்கள் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தினசரி 20க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் அம்மாவட்டத்தில் ஏற்பட்டு வருவதால், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் உடலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்படி நோய் தொற்று ஏற்படாத வகையில், முறையாக கிருமி நாசினி தெளித்து, இதற்கான பிரத்யேக உறையில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், அதை மருத்துவமனை நிர்வாகம் சரியான முறையில் செய்யாமல், பிணத்தை ஏனோதானோ என பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, குப்பை கூளங்கள் போல தரையில் போட்டுள்ளது. மேலும், கெரோனாவால் இறந்தவர்களின் உறவினர்களே பிணத்தை அடையாளம் காணும்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள், உறவினர்கள் ஒவ்வொரு பிணமாக அவிழ்த்து பார்த்து அடையாளம் காண வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏற்கனவே துக்கத்தில் இருந்த உறவினர்களுக்கு இது கூடுதல் மன வலியை கொடுத்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையின் அலட்சியம் குறித்து ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. பல நோயாளி குடும்பங்கள் மருத்துவமனை ஊழியர்கள் சவக்கிடங்கிற்குள் நுழைந்து, உறவினர்களின் உடல்களைத் தேடி எடுத்துச் செல்லுமாறு கூறியதாகக் கூறியுள்ளனர்.
தேனியைச் சேர்ந்த 47 வயதுடையவரின் உறவினர்கள் கோவிட் -19 ல் இறந்ததும், அவரது உறவினர்கள் உடலைக் கோரச் சென்றதும் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது.
அங்கு சென்ற அவர்கள், நீல நிற பிளாஸ்டிக் பைகளில் மூடப்பட்டிருந்த பல உடல்களைக் கண்டதும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்களைத் தேட வேண்டியிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து, தேனி அரசு மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், இந்த சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர்களுக்கு க ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்களில், உண்மை என்னவென்றால், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்த சவக்கிடங்கிற்குள் உறவினர்கள் எந்தவித பாதுகாப்பும் மேற்கொள்ளப்படாமல் அனுமதிக்கப்பட்டது, விதி மீறி செயல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதற்கு இந்த ஒரு புகைப்படமே சாட்சி என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.