டில்லி
மாட்டிடம் இருந்து பால் எடுக்காமல் சோயா பால் போன்ற சைவ பால் உற்பத்திக்கு மாற அமுல் நிறுவனத்துக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கடிதம் எழுதி உள்ளது.
அமெரிக்காவின் வெர்ஜிநியா மாகாணத்தில் உள்ள நார்போல்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு விலக்குகள் நல உரிமை அமைப்பான பீட்டா செயல்பட்டு வருகிறது. விலங்குகளைத் தோல் மற்றும் இறைச்சிக்கும் சர்க்கஸ் மற்றும் சோதனை கூடங்களில் பயன்படுத்துவதற்கும் பீட்டா அமைப்பு கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும் விலங்குகள் சித்திரவதைக்கு எதிராகப் பிரசாரம் நடத்தி வருகிறது.
இந்த அமைப்பு தொடுத்த வழக்கால் தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு மக்கள் போராட்டத்தால் தடை நீக்கப்பட்டது. காளை மாடுகளுக்கு அடுத்ததாக பசுமாடுகளைக் கொண்டு அடுத்த சர்ச்சையை பீட்டா தொடங்கி உள்ளது. குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனம் மூலம் இந்தியா வெண்மைப் புரட்சியைத் தொடங்கியது.
குஜராத் மாநிலத்தின் இந்த நிறுவனத்தை பின் தொடர்ந்து பல மாநிலங்கள் பால் உற்பத்தியில் இறங்கி தற்போது இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. இந்நிலையில் பீட்டா அமைப்பு அமுல் நிறுவனத்துக்கு மாட்டுப்பால் உற்பத்திக்குப் பதிலாக சோயா பால் போன்ற சைவப் பால் உற்பத்தியில் இறங்க வேண்டும் எனக் கடிதம் எழுதியது.
இதற்கு அமுல் நிர்வாக இயக்குநர் ஆர் எஸ் சோதி, “10 கோடி நிலமற்ற விவசாயிகள் பால் உற்பத்தி மூலம் உயிர் வாழ்கின்றனர். பீட்டா அமைப்பு அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்குமா? இந்த விவசாயிகளால் தொழிற்சாலைகள் அமைத்து சைவ பால் தயாரிக்க முடியுமா? இத்தனை விலை உயர்ந்த பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கட்டுப்படி ஆகாது
இவர்களது நோக்கம் கடந்த 75 ஆண்டுகளாக உருவாக்கி வைத்துள்ள விவசாயிகளின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஆகும். அவர்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட சோயாவை அதிக விலைக்கு இந்தியச் சந்தையில் இறக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் இந்த முயற்சியில் இறங்கி உள்ளனர்” எனப் பதில் அளித்துள்ளார்.
சமூக வலைத் தளங்களில் பலரும் பீட்டாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது மூர்க்கத்தனமான கோரிக்கை என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அமுல் நிறுவனம் பீட்டாவின் கோரிக்கைகளை ஏற்காமல் இத்தனை ஆண்டுகளாகச் செய்து வரும் பால் உற்பத்தியை இன்னும் சிறப்புடன் செய்ய வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.
மேலும் சிலர் தினமும் பால் வாங்க முடியாத ஏழைகள் உள்ள இந்தியாவில் விலை உயர்ந்த சோயா பாலை மக்கள் எப்படி வாங்க முடியும்? இதைச் சீனாவிடம், ஆஸ்திரேலியாவிடம், அமெரிக்காவிடம் வலியுறுத்தாமல் இந்தியாவை ஏன் வலியுறுத்துகிறது எனவும் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.