சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு ஜூன் 6ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்றம் சென்னை மற்றும் மதுரை கிளையில், அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என  சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து  சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என்.செந்தில்குமார் வெளியிட்ட  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா பரவல் காரணமாக உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

முதல்கட்டமாக ஜூன் 1 முதல் 11ம் தேதிவரையிலான பட்டியல் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜூன் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை மிக அவசரமான வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அமர்வு, ஜூன் 1 முதல் 11ம் தேதி வரை அவசர வழக்குகளை விசாரிக்கும்.

ஜூன் 1 முதல் 3ம் தேதி வரை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எஸ்.கண்ணம்மாள் அமர்வு ரிட் வழக்குகளையும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வு குற்ற வழக்குகளையும் விசாரிப்பார்கள்.

இவர்கள் தவிர, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் முறையே ரிட் வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் முன் ஜாமீன் தவிர்த்து பிற குற்ற வழக்குகளை விசாரிப்பார்கள்.

 ஜூன் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்ச்செல்வி அமர்வும், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.பொங்கியப்பன் அமர்வும், நீதிபதிகள் வி.பார்த்திபன், எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.

ஜூன் 9 முதல் 11ம் தேதி வரை நீதிபதிகள் டி.ராஜா, வி.சிவஞானம் அமர்வு, நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா அமர்வு மற்றும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அப்துல்குத்தூஸ், ஜி.கே.இளந்திரையன் ஆகியோரும் வழக்குகளை விசாரிப்பார்கள்.

மதுரைக் கிளையை பொறுத்தவரை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு, நீதிபதிகள் கே.கல்யாண சுந்தரம், ஆர்.தாரணி அமர்வு மற்றும் நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏ.ஏ.நக்கீரன், பி.டி.ஆதிகேசவலு, ஜி.ஆர்.சுவாமிநாதன், சந்திரசேகரன் ஆகியோர் மூன்று பிரிவுகளாக வழக்குகளை விசாரிப்பார்கள்.

தலைமை நீதிபதி அமர்வில் கொரோனா தொற்று பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பான பொதுநல வழக்குகள் முக்கிய இடம்பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.