சென்னை: இந்தியாவிலேயே அதிகளவு ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம், ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், மற்றோரு புறம் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமுடக்கத்தை அறிவித்து, மக்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்திய நிலையில், தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
மே 6ம் தேதி எடப்பாடி பழனிசாமி காபந்து முதல்வராக இருக்கும் போது தமிழகத்தின் ஒருநாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெ.டன்; தற்போது ஒருநாள் கையிருப்பு 650 மெ.டன் ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்., உதயகுமார், செல்லூர் ராஜு உள்பட பாஜக எம்.எல்.ஏ.க்களே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டுகிறார் என்றார்.
மேலும், கோரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிகளவு ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் RT-PCR சோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுவதாக ஐ.சி.எம்.ஆரே தெரிவித்து உள்ளது.
மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். கிராமப்புறங்களில் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.