சென்னை: தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது,

“தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் எனக் கருதப்படும் நபர்கள் குறித்த தகவல்களை மாநகர நல அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், அதுகுறித்த தகவல்களை மாநகராட்சிக்குத் தருவதில்லை.

அதனால், தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் அல்லது கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், உள்ளிட்ட விவரங்களை சென்னை மாநகராட்சிக்குத் தினமும் மெயில் அனுப்ப வேண்டும்.

அப்படி விவரங்களை தெரிவிக்கவில்லையென்றால், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 51-ன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதைக் கண்காணிக்க பூச்சியியல் வல்லுநர்களை கொண்ட 15 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.