மங்களூரு: இந்திய மக்களின் தேவைக்காக குவைத்தில் இருந்து 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கடற்படை கப்பல் மூலம் இந்தியா வந்தடைந்துள்ளது. இவை, மங்களூரு கடற்படை தளத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அங்கே, கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. ‘ மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்து, மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்க வெளிநாடுகளில் இருந்து மத்தியஅரசு ஆக்சிஜன் இறக்குமதி செய்து வருகிறது. அதன்படி, குவைத்தில் இருந்து திரவ ஆக்சிஜன் இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். சர்துள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள், கர்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகம் வந்தடைந்தது.
குவைத் ஷுவைக் துறைமுகத்தில் உள்ள கடற்படைக் கப்பலில் சுமார் 190 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் 1,200 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டது. இந்த கப்பல் மே 15ந்தேதி குவைத்திலிருந்து புறப்பட்டது. நேற்று (25ந்தேதி) மங்களூரு துறைமுகம் வந்தடைந்தது. அவை துறைமுகத்தில் இருந்து பிரத்யேக லாரிகள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களும், கன்டெய்னர்களும் கொண்டு செல்லப்பட்டு தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது குவைத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 190 மெட்ரிக் டன் ஆக்சிஜனையும் கர்நாடக அரசும், கேரள அரசும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. இதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.