சென்னை

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தமிழகத்தை விட மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் 10% அதிக தடுப்பூசிகளை மத்திய அரசு அளித்துள்ளதாக்க அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

நாடெங்கும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசிகள் போடுவது அவசியம் ஆகி உள்ளது.   இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் கிடைக்கின்றன.  சமீபத்தில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள மூன்றாவது தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தற்போது தான் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது.   எனவே நாட்டில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நல அமைச்சர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் இது குறித்து, “தமிழகத்துக்குத் தடுப்பூசிகள் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.  தற்போது மத்திய அரசு 77 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வழங்கி உள்ளது.  தமிழகத்தின் மக்கள் தொகை 8.36 கோடி ஆகும்.   அதாவது 6.4% தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக மக்களில் சுமார் 70 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போட முடியும்.  அதே வேளையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 6.37 கோடி மக்கள் தொகை உள்ளனர்.  குஜராத் மாநிலத்துக்கு 16.4% கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.  இது தமிழகத்தை விட 10% அதிகம் ஆகும்.   இவ்வாறு தமிழகத்துக்கு மத்திய அரசு தடுப்பூசிகள் ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டி உள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு 18-44 வயதினருக்கு தடுப்பூசிகள் போட வசதியாக 13 லட்சம் டோஸ்களுக்காக ரூ.46 கோடி அளித்துள்ளது.  இதில் சுமார் 11 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை வந்துள்ளன.  அவற்றை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளித்துள்ளோம்.   இதன் மூலம் இந்த வயதுக்குள் உள்ள அனைவருக்கும் ஊசி போட முடியாது என்பதால் சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.