சென்னை: தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதால், 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் டோஸ் எடுத்தவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்த மறுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் முதல்45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவர்கள் தற்போது 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள காத்திருக்கின்றனர். அவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடும் குறிக்கப்பட்ட தேதிகள் வந்தும், இதுவரை தடுப்பூசி போடப்படாமல் உள்ளது. தடுப்பூசி போடச்செல்பவர்களிடம் தடுப்பூசி ஸ்டாக் இல்லை என்றும், அரசு 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதை அரசு நிறுத்தச்சொல்லி உத்தரவிட்டு இருப்பதாக சுகாதார மையங்களில் கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி போடச்செல்லும் நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்திய மாநில அரசு வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மக்களுக்கு தேவையான தடுப்பூசி கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள், 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நாட்களை முதலில் 12 முதல் 16 வாரங்கள் என அறிவித்த நிலையில், தற்போது 84 நாட்களாக அதிகரித்து மத்தியஅரசு உத்தரவிட்டது. ஆனால், முதல் டோஸ் பெற்று 2வது டோஸ் போடுவதற்கான பதிவு செய்தவர்கள் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட வந்தால், அவர்களை திருப்பி அனுப்ப கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தும்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியது.
தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதை மறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசோ, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி அதிக அளவில் ஸ்டாக் இருப்பதாக அவ்வப்போது பட்டியல் வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளையில் சென்னையில் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் கூறியிருக்கிறார்.
ஆனால், தமிழகத்தில் தற்போது முதல் டோஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடுவதை நிறுத்தச்சொல்லி தமிழகஅரசு உத்தரவிட்டு இருப்பதாக சுகாதார மையங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீரழிவு உள்பட பல்வேறு நோய்கள் உள்ள நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் 2வது தடுப்பூசி போடுவதை தமிழகஅரசு தடுத்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.