தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் நேற்று முகூர்த்த நாளாக இருந்ததால், பல்வேறு இடங்களில் திருமணங்கள் வெகு விமரிசையாக நடந்தது.

மதுரையில், இதுபோன்று நடந்த ஒரு திருமணம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த ராகேஷ் – தக்ஷிணா இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது, அதற்காக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தை இரண்டு மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்தனர்.

மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் 161 பேருடன் பெங்களூரு நோக்கி மதுரையில் இருந்து புறப்பட்ட இந்த தனி விமானம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேராக பறந்த போது நடுவானில் விமானத்தில் இவர்கள் திருமணம் விமரிசையாக நடந்தது.

இதை படம்பிடித்த உறவினர் ஒருவர், அதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட, பற்றிக்கொண்டது விவகாரம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் கேட்டு விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அதோடு, கொரோனா கால விதிமுறைகளை மீறி செயல்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை போலீசாருக்கும் தகவல் அனுப்பி இருக்கின்றனர்.

ராகேஷ் – தக்ஷிணா திருமணம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மேல் நடந்ததால், இது குறித்த புகாரை மதுரை மாநகர காவல் துறை ஆணையர் தான் விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் நழுவிக்கொண்டது, ஆணையர் அலுவலகமோ இதுகுறித்து எதுவும் தெரியாததுபோல் இருக்கிறது.

அதனால், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், மாநகர ஆணையர் அலுவலகத்திற்கும் இடையே போட்டி நிலவி வருவதாக தெரிகிறது.