சென்னை
இன்று முதல் சென்னையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலாகி உள்ளதால் டிரோன் மூலம் கண்காணிக்கச் சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று வரை ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையொட்டி சென்னை நகரில் 13 எல்லை தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த எல்லைகளுக்கிடையே செல்ல இ பதிவு முறை கட்டாயம் ஆக்கப்பட்டது. விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆயினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. எனவே இன்று முதல் தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை ஒரு வாரத்துக்கு அமல்படுத்தி உள்ளது. நேற்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். கூட்டத்தில் ரோந்து மற்றும் கண்காணிப்பைப் பலப்படுத்தத் தடுப்பு வேலிகள் அமைக்கவும் தெருவுக்குள் சென்று கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் வெளியே நடமாடுவதை டிரோன் என்னும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. விதிகளை மீறிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு முழு ஊரடங்கு முடிந்த பிறகு நீதிமன்றம் மூலம் திரும்பப் பெற முடியும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.