சென்னை

சென்னைக்குத் தனி விமானம் மூலம் மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்ட் புனேவில் இருந்து வந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.    ஆனால் போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் அந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது.

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்காகச் சர்வதேச ஒப்பந்தப் புள்ளி கோரி உள்ளது.  இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி அன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணியைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அத்துடன் நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தர்.

கடந்த 19 ஆம் தேதி அன்று தமிழகத்துக்கு 1 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.  இதுவரை 83,31,720 டோஸ்கள் தடுப்பூசி வந்துள்ளன.  நேற்று புனேவில் இருந்து தனி விமானத்தில் 2.3 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி வந்துள்ளன.  அந்த மருந்துகளைச் சென்னை  டி எம் எஸ் வளாகத்தில் உள்ள பொதுச் சுகாதாரத்துறை அலுவலகத்தில் பத்திரப்படுத்தி வைத்துள்ள அதிகாரிகள் தேவையான மாவட்டங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்க உள்ளனர்.