தர்பங்கா:
பீகார் அரசு மருத்துவமனை சாக்கடை நீர் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதால் நோயாளிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிறகு பீகாரில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (டி.எம்.சி.எச்) வசதிகள் வருந்தத்தக்க நிலையில் உள்ளன.

சமஸ்திபூர், மதுபனி மற்றும் சஹர்சா உள்ளிட்ட பல மாவட்டங்களில் வசிப்பவர்கள் டி.எம்.சி.எச்-ஐ நம்பியிருக்கிறார்கள், ஆனால் இந்த மருத்துவக் கல்லூரிக்கு வருவது நரகத்திற்குச் செல்வது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.

இதுமட்டுமின்றி, குப்பைகளால் நிரம்பி வழியும் இந்த மருத்துவமனை வளாகத்தில் பன்றிகள் மற்றும் மாடு சுற்றி வருவது பெரிய சுகாதார கேட்டை உண்டாக்கியுள்ளது.

இங்கு பணிபுரியும் செவிலியர்கள், சாக்கடை நீர் குளங்களைக் கடந்தே மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.

இதுகுறித்து பேசிய செவிலியர் தீபா குமாரி, 27 ஆண்டுகளாக இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், இது மழைக்காலங்களில் மிகவும் மோசமடையும் என்றும் கூறினார்.