டெல்லி: வருமான வரித்தாக்கல் செய்ய புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளம்  ஜூன் 7ஆம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது.

தற்போதைய நிலையில், மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. வருமான வரி செலுத்துபவர்கள், தங்களது தனிநபர் வருமான வரி கணக்கையும், வணிகம் தொடர்பான வருமான வரி கணக்கையும் இதில் தாக்கல் செய்து வருகிறார்கள்.

இதுமட்டுமின்றி,  வருமான வரித்துறையிடம் சந்தேகம் எழுப்புவதற்கும், ரீபண்ட் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பவும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல், வருமான வரித்துறையினரும் வரி செலுத்துவோரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நோட்டீஸ் அனுப்பவும், மேல்முறையீடு, அபராதம், மதிப்பீடு போன்றவற்றில் இறுதி உத்தரவு பிறப்பிக்கவும் இந்த இணையதளத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இதற்குப் பதிலாக www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித்துறை தொடங்குகிறது. இந்த இணையதளம் ஜூன் 7ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இது, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதிய இணையதளத்துக்கு மாறும் பணிகளுக்காக தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1ம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மூடப்படும். அந்த நாட்களில் அந்த இணையதளத்தை வரி செலுத்துபவர்களோ, வரித்துறை ஊழியர்களோ பயன்படுத்த முடியாது.

புதிய இணையதளத்துக்குப் பழகிக்கொள்ள வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் அளிக்கும்வகையில், அதிகாரிகள் தங்களது விசாரணை உள்ளிட்ட பணிகளை ஜூன் 10ஆம் தேதியில் இருந்து தொடங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.