சென்னை : மும்பையிலிருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் தேவைக்காக 96 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் சென்னை வந்தன. அவை பத்திரமாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி, அரசு சார்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் மருத்துவமனையிலும் தடுப்பூசி மருந்துகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் இறக்குமதி செய்து வருகின்றன. அந்த வகையில், மும்பையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் எட்டு பார்சல்களில் 260 கிலோ எடை கொண்ட 96 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள், இன்று (மே 21) சென்னை கொண்டு வரப்பட்டன.
அவற்றில், குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை அமைந்தகரையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நான்கு பார்சல்களும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நான்கு பார்சல்களும் கொண்டு செல்லப்பட்டன.