சென்னை: வெப்பச்சலனம் – வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘வெப்பச்சலனம், தென்தமிழ்நாட்டை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி (5.8 முதல் 7.6 கிலோமீட்டர் உயரம்வரை) காரணமாக இன்று (மே 21) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூட மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

பொதுவான அறிவிப்பு

மே 22ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 23ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 24ஆம் தேதி, மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

மே 25ஆம் தேதி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

3 மாநில மீனவர்களுக்கான எச்சரிக்கை

மே 21ஆம் தேதி, தென் தமிழ்நாடு கடற்பகுதி, மன்னார்வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45லிருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மே 22,23ஆம் தேதி, தமிழ்நாடு கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .

மே 24ஆம் தேதி, தமிழ்நாடு, ஆந்திர கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 25ஆம் தேதி, தமிழ்நாடு, ஆந்திர கடலோரப் பகுதி, மன்னார்வளைகுடா தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதிய புயல் உருவாக வாய்ப்பு

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் மே 22ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மே 24ஆம் தேதி புயலாக வலுவடைந்து வட மேற்குத் திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று ஒடிசா – மேற்குவங்கக் கரையை மே 26ஆம் தேதி கடக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)

சேத்தியாத்தோப்பு (கடலூர்) 10, மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி ) 9, கேசிஎஸ் மில் அரியலூர் (கள்ளக்குறிச்சி) 8, தியாகதுருகம் (கள்ளக்குறிச்சி) 7, சிதம்பரம், திருப்பத்தூர், திண்டிவனம், பெருங்கலூர் (புதுக்கோட்டை) தலா 6, திருவள்ளூர், ஆர்.எஸ் . மங்களம் (ராமநாதபுரம்) , வாலாஜா (ராணிப்பேட்டை) தலா 5 , ஹரூர் (தர்மபுரி), கொரட்டூர் (திருவள்ளூர்), திருப்புவனம் (சிவகங்கை), சத்தியபாமா பல்கலை (செங்கல்பட்டு), சின்னக்கல்லார் (கோவை) தலா 4, தஞ்சாவூர், நாமக்கல் ஆலந்தூர் (சென்னை) , சென்னை விமான நிலையம் மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு, தலா 3, போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), வாழப்பாடி (சேலம்), மதுரை விமான நிலையம், வேதாரண்யம் (நாகப்பட்டினம்), பந்தலூர் (நீலகிரி) தலா 2 .

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு

மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாவதன் காரணமாக தமிழ்நாடு பகுதிகளில் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து வீச வாய்ப்பிருப்பதால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும்; வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.