பாட்னா

பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றி நோயாளிகளுக்கு அளித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக பீகார் மாநிலத்தில் நேற்று வரை 6,64 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்றுவரை 4,039 பேர் உயிர் இழந்து, 5,95,377 பேர் குணம் அடைந்து 64,698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் இவர்களை அனுமதிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லை.

இதையொட்டி பல மாற்று ஏற்பாடுகளை பீகார் அரசு செய்து வருகிறது.  ஆயினும் பல நோயாளிகள் படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதி கிடைக்காமல் உள்ளனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை கொரோனா நல மையமாக மாற்றி உள்ளார்.   இந்த மையத்தில் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன.  இந்த மையத்தை அவர் கொரோனா நோயாளிகளுக்கு அளித்துள்ளார்.

இது குறித்து தேஜஸ்வி, “மாநிலத்தில் தற்போது மருத்துவமனையில் போதுமான படுக்கைகள் இல்லாததால் நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை உள்ளது.  எனவே எனது இல்லத்தை நல மையமாக மாற்றி உள்ளேன். மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காதவர்களை இங்கு அனுமதிக்குமாறு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.