டில்லி

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரிடும் என ஆய்வுகள் கூறுகின்றன

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.   இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதையொட்டி கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மிகச் சிலருக்கு கொரோனா  பாதிப்பு மீண்டும் ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.   இது மக்களிடையே ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்கி வருகின்றனர்.  அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை வலியுறுத்துகின்றன.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  அந்த ஆய்வில், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு 100 நாட்களில் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் குறித்துக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த கணக்கெடுப்பில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற நேரிடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது  மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 97.38% பேர் கொரோனாவில் இருந்து முழுமையாகக் காக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.